ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் அற்புதங்கள் பாகம் – 1

ஓம் சாய்ராம்

யாழ் சுதாகர் வீட்டில்

சாயிபாபாவுக்கு

போட்ட மாலை வளர்ந்தது

 

வர் பெயர் ரகோத்தம்மா (74) எனது இரண்டாவது தாய், எழுதப் படிக்கத் தெரியாதவர், கள்ளம், கபடம், அறியாதவர். எங்கள் வீட்டில் 15 ஆண்டுகளாக ஆயாவாக பணிபுரிகின்றார். எங்கள் வீட்டில் இருக்கும் பாபா படத்திற்கு ஒவ்வொரு வியாழக்கிழமையும் 4 முழ மல்லிப்பூ கொண்டு வந்து மாலையாகப் போடுவது அவர் வழக்கம். அடுத்த நாள் வெள்ளிக்கிழமை பார்த்தால் மாலை 2 முழத்திற்கு வளர்ந்திருக்கும். சனிக்கிழமை மாலை இன்னும் அதிகம் வளர்ந்திருக்கும்.

3.10.2024 வியாழக்கிழமை பாபாவிற்கு மல்லிப்பூ மாலை போட்டவுடன் எடுத்த படம்.


4.10.2024 வெள்ளிக்கிழமை மல்லிப்பூ மாலை இன்னும் வளர்ந்த பின்பு  எடுத்த படம்.


5.10.2024 சனிக்கிழமை  மல்லிப்பூ மாலை மேலும் வளர்ந்த பிறகு எடுத்த படம்.

திருமதி ரகோத்தம்மா

1995 என்று நினைக்கிறேன். யான் மங்கை பத்திரிகையில் பொறுப்பாசிரியராக பணியாற்றிக்கொண்டிருந்தேன். யான் அமர்ந்திருந்த நாற்காலிக்கு பின்புறத்தில் உயரமாக ஒரு போர்டு இருந்தது. அதில் வித விதமான போஸ்கள் கொண்ட சுவாமியின் படங்கள் ஒட்டியிருந்தேன். தினமும் அலுவலகம் செல்லும் போது போர்டில் இருக்கும் சுவாமி படத்திற்கு மல்லிப்பூ போடுவேன்.

அப்போது பேசும் படம் சம்பத் குமார் அவர்கள் பொம்மை பத்திரிகையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். திடீரென ஒரு நாள் அவர் சொன்னார்.  நீங்கள் பாபாவிற்கு போடும் மாலை கொஞ்சம் கொஞ்சமாக வளருகின்றது என்று. அங்கு வேலை பார்த்த பாபு அய்யர் சொன்னார். இன்று மாலை மிகவும் கீழ்நோக்கி வளர்ந்து தரையை தொடும் அளவிற்கு வளர்ந்துள்ளது. மாலை தரையில் படக் கூடாது. கீழே ஒரு துணியை விரியுங்கள் என்று.

தினமும் காலையில் 10 மணிக்கு நான் போட்ட 5 முழ மாலை அன்றைய தினமே 8 முழ மாலையாக வளர்வதை பார்க்கப் பார்க்க மெய் சிலிர்த்தது.

1994 என்று நினைக்கிறேன். எங்கள் மங்கை பத்திரிகையில் பிரபல அழகுக் கலை நிபுணர் ஹேமா லட்சுமணன் அவர்கள் " அழகுக்கு அழகு செய்ய " என்ற பெயரில் ஒரு தொடர் எழுதி வந்தார்.

புட்டபர்த்தி சாயிபாபாவின் தீவிர பக்தையான அவர் சொன்னார்.

"உலகமெங்கும் உங்கள் குரல் ஒலிக்கும். பாபா கருணை செய்வார்" என்று.

இரண்டே வருடத்தில் அவரது வாக்கு பலித்தது.

லண்டன் IBC வானொலியில் எனது பல்வேறு நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி உற்சாகப்படுத்தினார் A.C தாசீசியஸ்  அவர்கள்.

கனடாவில் இயங்கும் ITR வானொலியின் கோணேஷ் அவர்களும்,

ஜெர்மனி ETR ரேடியோவின் ரவி மாஸ்டரும்,

ஆஸ்திரேலியாவில் இருந்து வரும் "இன்பத் தமிழ் ஒலி " வானொலியின் பாலசிங்கம் பிரபாகரன் அவர்களும் எனது நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி உலக வானொலிகளில் என்னை உலா வரச்செய்தார்கள்.

1994 ல் சென்னை F.M ல் நேயம் வீரபாண்டியன் ஒலிபரப்பிய "மாலைத் தென்றல்" நிகழ்ச்சியை, வாரத்தில் ஐந்து நாட்களும் தொகுத்து வழங்கும் வாய்ப்பை அவர் வழங்கினார்.

இசை அமைப்பாளர் உதயன் விக்டர் அவர்களின் சிபாரிசின் மூலம் இந்த பெருவாய்ப்பு எனக்கு கிடைத்தது.

இன்று தொடர்ந்து 21 ஆண்டுகளாக F.M ரேடியோவில் மட்டுமல்ல,T.V யிலும் எனது குரல் ஒலித்து வருகிறது.

 

லங்கையில் ஒரு தந்தை பெரியார் இருந்தார். அவர் பெயர் டாக்டர் கோவூர். பகுத்தறிவுச் செம்மல்.

"கடவுள் என்று ஒருவர் இல்லவே இல்லை. நம் மக்கள் மத்தியில் நிறைய மூட நம்பிக்கைகள் உள்ளன. அதிலும் குறிப்பாக பேய்பிடித்து ஆடுவது, உருவந்து சாமியாடுவது இவை எல்லாம் மன நோய்கள்"

என்றும் மேலும் பல புரட்சிகரமான கருத்துக்களைச்  சொன்னார் கோவூர்.

அப்போது எனக்கு 22 வயது.

யாழ்ப்பாணம் ' மைற் ' மண்டபத்திற்கு பகுத்தறிவு பிரச்சாரத்திற்காக கோவூர் வந்திருந்தார். அவரது கருத்தரங்கத்தை பார்ப்பதற்காக நானும் ஆவலுடன் சென்றேன்.

ஒருவர் சாயிபாபா பற்றி டாக்டர் கோவூரிடம் கருத்து கேட்டார். " சாயிபாபா ஒரு கடவுள் அல்ல. அவர் மனிதனால் படைக்கப்பட்ட கடவுள். விபூதி,மோதிரம்,லிங்கம் போன்ற கைக்கு அடக்கமான பொருட்களை வரவழைத்து தரும் அவரால் ஒரு பூசணிக்காயை  உருவாக்கி தர முடியுமா? " என்று சவால் விட்டார் கோவூர்.

கோவூரின் கருத்தரங்கம் முடிந்ததும் ஒரு நாஸ்திகனாக வெளியே வந்தேன்.

வதிரியில், எங்கள் வீட்டிற்கு எதிர் வீட்டில் இருந்த மயில்வாகனம் மாஸ்டர் வீட்டிற்கு சென்றேன்.

அவர் வீட்டு ஹாலிலே ஒரு சாயிபாபா படம் மாட்டியிருந்தது.

சாயிபாபா பற்றி கோவூர் சொன்னதை அப்படியே அவரிடம் சொன்னேன்.

உடனே அவர் ஓடோடி சென்று பாபாவின் படத்தை கழற்றி உள்ளே வைத்தார்.

இந்த சம்பவம் நடந்த போது சுவாமி மனதிற்குள் சிரித்திருப்பார்.

" எனது படத்தை அகற்ற காரணமான இவன் இன்னும் 16 ஆண்டுகள் கழித்து விதம் விதமான போஸ்களில் எனது படங்களை வீடு மற்றும் அலுவலகம் எங்கும் ட்ட போகின்றான்" என்று.

 

பாபா செய்யும் சித்து வேலைகள் எல்லாம் தெய்வீகமானவை அல்ல.... எல்லாமே மாயாஜாலம் என்று சிலர்  கூறுகின்றார்கள்.

ஒரு பேச்சுக்கு அதை ஒப்புக் கொண்டாலும், அமெரிக்காவில் இருக்கும் அவர் புகைப்படத்தில் இருந்து விபூதி கொட்டுவதும்,

அவரது பஜனை பாடல்களை பாடும் போது சுவாமி படத்தில் இருந்து தேன் கசிந்து வருவதும் யார் செய்த மாயாஜாலம்?!

ஆஸ்திரேலியாவில் உள்ள எனது மைத்துனர் விஜயகுமார் வீட்டு பூஜை அறையில் பாபா படத்திலிருந்து விபூதி கொட்டுகின்றது.

இலங்கை திருகோணமலையில் உள்ள ஒரு சாயி பக்தை வீட்டில் துடைக்க துடைக்க விபூதி கொட்டிக் கொண்டே இருக்கிறது.கண்டியில் இருக்கும் ராசாத்தி அக்கா இரண்டு தடவை அங்கு சென்று சுவாமியை தரிசித்து திரும்பினார்.

எனது நண்பன் ராமநாதன் (கனடா) குடும்பத்தோடு வெளியே சென்று விட்டு ஒருவாரம் கழித்து வீடு வந்து பார்த்த போது பாபாவின் பக்கத்தில் ஒரு பாம்பு புற்று போல விபூதி குவியலை கண்டு மெய் சிலிர்த்தார்.

 

ழுத்தாளர் சுஜாதா அவர்கள் விகடனில் உலக அதிசியங்கள்,மர்மங்கள், அற்புதங்கள் பற்றி ஒரு தொடர் கட்டுரை எழுதினார். அந்த தொடரில் சத்திய சாயிபாபாவின் அற்புதங்கள் பற்றி ஒரு பத்தி வியந்து எழுதினார்.

புட்டபர்த்தி சாய்பாபாவின் மகிமைகளை கூறும் ஒரு தொடரை எழுத்தாளர் ஸ்ரீ வேணுகோபாலன். புஷ்பாதங்கதுரை. 'சாவி' பத்திரிகையில் எழுதிக்கொண்டிருந்தபோது புட்டபர்த்தியில் யாருமே எதிர்பாராத துப்பாக்கி சூட்டு சம்பவம் நடைபெற்றது.

உடனே அதே சாவி  இதழில் ஆசிரியர் பின்வருமாறு எழுதினார்.

"முக்காலமும் உணர்ந்த மகான் சாயிபாபா என்றால் இந்த விபரீத சம்பவம் பற்றி அவருக்கு முன்கூட்டியே தெரியாதா?".

இன்னொரு சம்பவம்.

சாயிபக்தர் ஒருவர் புட்டபர்த்திக்கு வந்து அங்குள்ள லாட்ஜில் தற்கொலை செய்து கொண்டார்.

இப்படியான சில கூத்துக்களும் நடந்திருக்கின்றன.

பாபா, தமக்குத்தாமே திருஷ்டி கழித்துக்கொண்டாரா என எண்ணத்தோன்றும்.

தெய்வமானது மனிதனாக அவதாரம் எடுக்கும் போது மனிதனின் குணங்களில் ஏதாவது சில அந்த தெய்வத்திற்கும் வந்துவிடும் . விஷ்ணு பகவான் இராமர் என்கிற மனிதனாக பிறந்த பின்பு மனிதனுக்கு வரக்கூடிய கஷ்டங்கள்,துன்பங்கள் எல்லாம் அவருக்கும் வந்தன.

அதே போல புட்டபர்த்தி பாபாவின் கையில் கட்டை விழுந்து காயமானது.

எத்தனையோ லட்சம் பேருக்கு தமது அற்புத சக்தி மூலம் புதுப்பிறவி கொடுத்த சாயிபாபா, தமக்கு ஏன் புதுப்பிறவி கொடுக்காமல் மருத்துவமனையில் கஷ்டப்பட்டார்.

சாயிபாபா பற்றி வரும் செய்திகளை எல்லாம் படிக்கும் பொழுது பின்வரும் வாசகம் என் நினைவிற்கு வரும்.

" நம்பினோருக்கு அவர் கடவுள்”

நம்பாதவர்க்கு அவர் கள்வன்"


த்ய சாயிபாபா உபதேசித்த அருள் மொழிகள் தமிழில் நூல் வடிவில் மட்டுமே வெளிவந்திருக்கின்றன. கேசட்டாக வரவில்லை.

எனது குரலில் அவரது அருள் மொழிகளை கேசட்டாக வெளியிட முடிவு செய்தேன்.

போரூர் ராம்கி அவர்கள்சாயி கிருஷ்ணா ஆடியோஸ்’ என்ற ஒரு நிறுவனத்தை தொடங்கி நிதி உதவியும் தந்து உற்சாகப்படுத்தினார். இது நடந்தது 1996 ல்.

கேசட் ஒலிப்பதிவிற்காக மந்தைவெளியில் இருந்த ஒரு ரெக்கார்டிங் தியேட்டருக்கு சென்றேன்.

அருள் மொழிகளை பக்தி ரசம் சொட்ட ஆர்வத்துடன் வாசித்தேன் .

ஒலிப்பதிவு முடிந்த பிறகுதான் எனக்கு கொஞ்சம் பயம் வந்தது.

சுவாமி எப்பேர்ப்பட்ட மகான்! அவரது அருள் மொழிகளை தெரிந்தும் தெரியாமலும் பல பாவங்களை செய்த நான் சொல்லலாமா? என்று நினைத்தபடி ஒரு வித குற்ற உணர்வுடன் வெளியே வந்தேன்.

அங்கு வந்து கொண்டிருந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி ஏறினேன்.

ஆட்டோவின் உள்ளே இரண்டு கைகளையும் உயர்த்தியபடி சுவாமியின் படம்.!!!!




அன்புடன் யாழ் சுதாகர்
whatsapp : 9962404974  ( 4 PM to 6 PM )
mail : rasigantamiloldsongs@gmail.com


லேஅவுட் - லால்குடி திருமுருகன்
படங்கள் - மணியரசன் மற்றும் ராஜசேகர்


Freevisitorcounters.com

Comments

Popular posts from this blog

ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் அற்புதங்கள் பாகம் – 2

மெய் சிலிர்க்க வைக்கும் பழைய பக்திப் பாடல்களுடன் சாயி பாபாவின் அருள்மொழிகள் - யாழ் சுதாகர்