நான் வீபூதியை என் நெற்றியில் பூசிக் கொள்ளவுமில்லை. அப்படி இருக்க இந்த வீபூதியின் நறுமணம் எப்படி வந்தது. எங்கிருந்து வந்தது?
நறுமணம் வீசிய திடீர் விபூதி
-ராமசுப்பு-
உலகில் உள்ள எல்லா நாடுகளைக் காட்டிலும் நமது பாரத தேசத்தில் தான்
நமது இதயத்தில் எந்த நேரமும் பிரகாசிக்கும்படியான 'ஆத்ம ஸ்வரூபத்தில்'
திளைத்திருக்கும் மஹா ஞானிகள் நிறைந்திருக்கின்றனர்.
நமது பாரத தேசத்தில் உள்ளது போல எங்கும் எந்த நாட்டிலும் இவ்வளவு உத்தமமான
மஹான்கள் அவதாரம் செய்ததில்லை.
நமது நாட்டில் ஆங்காங்கே தோன்றிய மஹான்களில் மக்களை பக்தி மார்க்கத்தில்
ஈடுபடுத்தி, இறைவன் மீது உறுதியான நம்பிக்கையை ஏற்படுத்தி, சேவை
மனப்பான்மை, அன்பு, உண்மை, தர்மம், போன்ற ஞான மார்க்கத்தில் கொண்டு
சென்று, பக்தர்களை நல்வழியில் நடத்திச் சென்று , பல அற்புதங்களை நிகழ்த்திக்
காட்டியவர் பகவான் ஸ்ரீ சத்யசாயிபாபா.
சமீபத்தில் ஒருநாள் ஸ்ரீ சாய் பக்தரான, அருமை நண்பர் திரு.யாழ் சுதாகர்
அவர்கள், என்னை அலைபேசியில் தொடர்பு கொண்டு, பகவான் ஸ்ரீ சத்தியசாய்பாபா
அவர்கள் நிகழ்த்திக் காட்டிய அற்புதங்கள் ஏதாவது தங்களிடம் இருந்தாலோ, அல்லது
உங்களுக்கோ, மற்ற உங்கள் நண்பர்களுக்கோ ஏற்பட்டிருந்தாலோ நீங்கள் எனக்கு
எழுதி அனுப்புங்கள், அதை என்னுடைய 'வெப்சைட்டில்' வெளியிடுகிறேன் என்று
என்னைக் கேட்டார்.
பாபாவின் மீது அன்பு கொண்ட எனக்கு அதை பாபா இட்ட கட்டளையாக மிக
ஆனந்தத்துடன் ஏற்றுக் கொண்டு, எனது நண்பர் ஒருவர் என்னிடம் கூறிய பாபாவின்
அற்புதம் ஒன்றை எழுதி திரு.யாழ்.சுதாகர் அவர்களுக்கு தபால் மூலம் அனுப்பி
வைத்தேன். அதைப் பெற்றுக்கொண்ட அவர், அதைக் கொண்டு சென்று பாபாவின்
திருப்பாதத்தில் வைத்துவிட்டு, கட்டுரை கிடைத்த செய்தியை எனக்கு அலைபேசி மூலம்
தெரிவித்தார்.
அதைத் தெரிவித்துவிட்டு, அலைபேசியை அணைத்து விட்ட அடுத்த நொடிப்
பொழுதில் அந்த இடம் முழுவதுமே வீபூதியின் வாசனை 'கம கம' வென்று பரவியது.
வீபூதி வாசனையை உணர்ந்த யாழ் சுதாகருக்கு உடம்பில் ஒரு புல்லரிப்பு ஏற்பட்டது.
சற்று நேரம் அமைதியாகி ஸ்ரீ சத்யசாயிபாபாவை நினைத்துப் பார்த்து தியானத்தில்
ஆழ்ந்தார்.
தியானம் கலைந்த பிறகு "என்ன ஆச்சரியம் ! என்னிடம் வீபூதி ஏதுமில்லை. என்
வீட்டிலும் இல்லை. நான் வீபூதியை என் நெற்றியில் பூசிக் கொள்ளவுமில்லை. அப்படி
இருக்க இந்த வீபூதியின் நறுமணம் எப்படி வந்தது. எங்கிருந்து வந்தது? என்று வியந்து
போனேன்.
இந்த அற்புதத்தை இக் கட்டுரை எழுதிய திரு.ராமசுப்புவிடம் சொல்ல வேண்டும்
என்று அவர் மனதில் நினைத்து , மீண்டும் அலைபேசியில் என்னை அழைத்து, இந்த
வீபூதி அற்புதத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டார்.
அப்போது அவரிடம் நான் சொன்னேன் "அன்பரே! அடியேன் எப்போதும் என்
நெற்றியில் திருநீறு அதாவது நெற்றியில் வீபூதி அணியாமலே இருக்க மாட்டேன்.
நான் தூங்கி எழுந்ததும் பல் துலக்கி, முகம் கழுவி, முகத்தைத் துடைத்ததும் முதல்
வேலையாக வீபூதியை எடுத்து என் நெற்றியில் இட்டுக் கொள்வேன். பிறகு
குளித்துவிட்டு, சுத்தமாகி மறுபடியும் வீபூதியை நீரில் குழைத்து நெற்றியிலும்,
கைகளிலும், புஜத்திலும் இப்படி உடலின் பதினொரு இடங்களில் சாஸ்திரப்படி
திருநீறு அணிந்து கொண்டு இறைவனை வழிபடும் வழக்கமுண்டு.
அது மட்டுமல்ல, எங்கள் குடும்பத்தின் தெய்வமாக வழிபடும் காவல் தெய்வம் என்று
சொல்லக்கூடிய கிராம தேவதை கோயில் ஒன்று உள்ளது. அந்தக் கோயிலில் பூ,
தேங்காய், பழம் கொண்டு சென்று வழிபடும் வழக்கம் கிடையாது. அந்த காவல்
தெய்வத்தை சென்று பயபக்தியோடு வழிபட்ட பிறகு, அக்கோயில் பூசாரி ஒரு
சிட்டிகை வீபூதியைப் பிரசாதமாகத் தருவார். அந்த வீபூதி மிகவும் அற்புதமான சக்தி
வாய்ந்தது. அதை வாங்கி நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும்.
அது மட்டுமல்ல எங்கள் குலதெய்வம் சென்னிமலை முருகப் பெருமான். ஆகவே
நாங்கள் சைவர்கள். எங்களுக்கு நெற்றியில் வீபூதி இட்டுக் கொள்வதே சைவத்தின்
சின்னம். ஆக இப்படியாக வீபூதி என்பது என்னுடன் ஒன்றிப் போனது " என்று
கூறினேன்.
இதைக் கேட்டு திரு. யாழ் சுதாகர் அவர்கள் பாபாவின் அற்புதத்தை எண்ணிப் பார்த்து
நெகிழ்ந்து போனார்.
-ஓம் ஸ்ரீ சாய்ராம்-
எழுதியவர்:- ராமசுப்பு, 19/18, புவனேஸ்வரி நகர்,
II - வது தெரு ஹோலஷ்மி Flats, குரோம்பேட்டை,
சென்னை - 600 044.
CELL : 91760 04409
Comments
Post a Comment